ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய்: வரத்து குறைவால் விலையேற்றம்

Friday, 14 December 20120 comments

                   மதுரை கீழமாரட் வீதியில் 25-க்கும் மேற்பட்ட வெங்காய மொத்த விற்பனை மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு மதுரை மாவட்டத்தில் செக் கானூரணி, ஆவியூர், அரசன்குளம், பாலமேடு, ஆகிய பகுதிகளில் இருந்தும், மேலும், தேனி, சின்னமனூர், உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் வெங்காயங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் மதுரை மாவட்ட தேவைக்குப் போக மீதி வெங்காயம் தென் மாவட்டங்களுக்கும், கேரள மற்றும் இலங்கை, சிங்கப்பூருக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

                கடந்த சில வாரங்களாக அதாவது தீபாவளிக்கு முன்பிருந்தே வெங்காயத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. முன்பு தரமான சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக படிப்படியாக விலை கூடி தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் ரூ.15க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை கிடுகிடுவென கூடியதை தொடர்ந்து பெண்களின் கண்களில் வெங்காயம் உரிக்காமலேயே, கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

                இந்த விலை ஏற்றம் குறித்து வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, கடந்த 15 நாட்களுக்கு முன்பு மொத்த விலையில் 10 கிலோவுக்கு ரூ.150-ஆக விற்கப்பட்டது. தற்போது இரு மடங்காகி ரூ.300 முதல் ரூ.400 வரையும், பெரிய வெங்காயம் ரூ.110 முதல் ரூ.210 வரை விற்கப்படுகிறது. போதிய மழை இல்லாததால் வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. இதுவே விலை ஏற்றத்திற்கு காரணம்.

               இன்னும் ஒரு சில வாரத்திற்குள் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கும். அப்போது விலை குறையும் என எதிர்பார்க்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும் போது, வெளி சந்தையை விட இங்கு குறைந்தது 5 கிலோ வாங்கினால் ரூ.10 வரை குறைவாக இருக்கும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media