சின்ன வெங்காய சாகுபடியில் 10 ஆண்டாக முதலிடத்தில் உள்ள மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயிகள் ஏக்கம்

Friday, 14 December 20120 comments

சின்ன வெங்காய சாகுபடியில் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தால் விலை அதிகரிக்கும் என்ற நிலை உள்ளது. 

               தமிழக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக இந்த மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் வெங்காய சாகுபடி நடந்து வருகிறது. 2006 & 2007ல் 18,202 ஏக்கரிலும், 2009 & 10ல் 18,507 ஏக்கரிலும் சாகுபடி நடந்துள்ளது. 

                 2011ல் 22,842 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகளவு சாகுபடி செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ ரூ.3 முதல் 5 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு நவம்பர் மாதம் வரை 15,812 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

           நவம்பரில் சுமார் 2000 ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. இது வழக்கத்தை விட மிகமிகக் குறைவாகும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நடப்பாண்டு குறிப் பிட்ட சில இடங்களில் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியையே கைவிட்டுள்ளனர். இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 15,812 ஏக்கரில் மட்டுமே சின்ன வெங்காய சாகுபடி நடந்துள்ளது. இருந்தும் தமிழக அளவில் சின்ன வெங்காய சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில்தான் உள்ளது. இதற்கு அடுத்தபடிதான் திருச்சி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் சராசரியாக 8,500 ஏக்கர் முதல் 9,500 ஏக்கர் வரை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
             மற்றபடி ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகியவற்றில் 5 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி, காஞ்சிபுரம், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 ஏக்கருக்கு குறைவாகவே சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. 

           கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த தொடர்மழை காரணமாக தற்போது சின்ன வெங்காயம் உழவர் சந்தையில் ரூ.24 முதல் ரூ.30 வரைக்கும் விற்கப்படுகிறது. தினசரி மார்க்கெட்டில் ரூ.30 முதல் ரூ.40 வரையும் விற்கப்படுகிறது. நவம்பர் மாத கடைசியில் (விவசாயிகளிடம் நேரடியாக) ரூ.45 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது புது வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையும், பழைய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.35 வரைக்கும் விற்கப்படுகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்திற்கான ஆண்டு சராசரி மழை 908 மிமீ ஆகும். நவம்பர் வரை 633 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இன்னும் 275 மிமீ மழை பெய்ய வேண்டியுள்ளது.
இந்தமழை தொடர் மழையாகப்பெய்து, வயலில் பயிரிடப்பட்டு முதிர்ச்சி அடையும் நிலையிலுள்ள வெங்காயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், இதற்கு முன்பாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்திற்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media