உற்பத்தி மற்றும் கையிருப்பு அதிகரிப்பால் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை

Friday, 29 June 20120 comments

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்நாட்டில் வெங்காயம் உற்பத்தி அதிகரித்து வருகிறது. கையிருப்பும் போதிய அளவிற்கு உள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பில்லை என, நாசிக்கை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா:வெங்காயம் அதிகளவில் விளையும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கோடை சாகுபடி முடிந்துள்ள நிலையிலும், மண்டிகளுக்கு அதிகளவில் வெங்காயம் வந்து கொண்டுள்ளது. நாசிக் மொத்த விலை சந்தையில் ஒரு குவிண்டால், வெங்காயத்தின் விலை, 500-550 ஆக உள்ளது.

டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் 10-14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில், வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு 40 சதவீத அளவிற்கு உள்ளது. இங்கு, வெங்காயத்திற்கு மிகப் பெரிய சந்தையாக "நாசிக்' உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, இந்த சந்தைக்கு இன்னும் அதிகளவில் வெங்காயம் வந்து கொண்டுள்ளது. விவசாயிகளும் போதிய அளவிற்கு வெங்காயத்தை கையிருப்பில் வைத்துள்ளனர்.

பயன்பாடு:வெங்காய கையிருப்பு, வரும் செப்டம்பர் மாதம் வரையிலான பயன்பாட்டிற்கு போதுமானதாகும் என, "தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு' தெரிவித்துள்ளது.இருப்பினும், தென்மேற்கு பருவழையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மகராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில், வரும் வேளாண் பருவத்தில், இதன் உற்பத்தி குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அவ்வாறு, உற்பத்தி குறையும் நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இதன் விலை உயரக்கூடும்.

கடந்த 2009-10ம் வேளாண் பருவத்தில், நாட்டின் வெங்காய உற்பத்தி, 1.22 கோடி டன்னாகவும், 2010-11ம் பருவத்தில், 1.51 கோடி டன்னாகவும் இருந்தது. இது, நடப்பு 2011-12ம் பருவத்தில் (ஜூலை-ஜூன்), 1.54 கோடி டன்னாக இருக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி:உள்நாட்டில், வெங்காய உற்பத்தி அதிகரித்ததையடுத்து, விவசாயிகளின் நலன் கருதி, நடப்பாண்டு மே மாதத்தில், பிரதமர் மன்மோகன் சிங், வேளாண் அமைச்சர் சரத்பவார், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்குவதாக அறிவித்தது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இதன் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்ற மே மாதத்தில், 1.10 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி ஆனது. வெங்காய உற்பத்தி மற்றும் கையிருப்பின் அடிப்படையில், மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, அடுத்த மாதம் மீண்டும் நிர்ணயிக்ககூடும் என தெரிகிறது.

இரண்டாம் இடம்:உலகளவில், வெங்காய உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நம்நாடு, 15 லட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு, 1,714 கோடி ரூபாயாகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வெங்காய ஏற்றுமதி, 2,159 கோடி ரூபாயாக இருந்தது. நம்நாட்டிலிருந்து, இலங்கை, வங்கதேசம், ரஷ்யா, மொரீஷியஸ், சீனா, சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வெங்காயம்ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media