தடப்பள்ளியில் சிறிய வெங்காயம் சாகுபடி அதிகரிப்பு

Friday, 15 June 20120 comments

கோபி தடப்பள்ளி பாசன பகுதியில் முதல்போக சாகுபடியில் நடப்பாண்டு சிறிய வெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில் முதல் போகத்தில் அதிகளவில் நெல்லும், மஞ்சள், வாழை, கரும்பு ஆகியவையும் சாகுபடி செய்யப்படுகிறது.

ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சிறிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சி.எஸ்., 450, சி.எஸ்., 911, சி.எஸ்., 450, ஏசி., 863 ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகிறது. கார, அமிலத்தன்மை 6-7 சதவீத அளவில் உள்ள நிலத்தில், சின்ன வெங்காயம் நன்கு செழித்து வளரும். ஆண்டு முழுவதும் வாய்க்கால் தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் வசதி உள்ள கோபி வட்டாரத்தில், கார, அமிலத்தன்மை அதிகளவில் உள்ளது.
கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மூலம் தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது.

கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் பகுதி விவசாயிகள் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், புடலை, சுரைக்காய், தட்டைப் பயிறு, பாகற்காய் மற்றும் வெங்காயம் பயிர்களை அதிகம் பயிரிடுகின்றனர்.

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்த சிறிய வெங்காயம், தற்போது அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனப் பகுதிகளிலும் பயிராகிறது. கோபி, சிறுவலூர், குருமந்தூர், நஞ்ச கவுண்டன்பாளையம், பாரியூர், குள்ளம்பாளையம், கொளப்பலூர், வேட்டைக்காரன் கோயில், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு சீஸனில் சிறிய வெங்காயம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது.

"ஆண்டு முழுவதும் சமையலில் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயத்துக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. "ஒரு ஹெக்டேர் நடவு செய்ய, 1,000 கிலோ விதை வெங்காயம் தேவை. களை கட்டுப்பாடு, பின்நேர்த்தி செய்தல் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருந்தால், நடவு செய்யப்பட்ட, 70 முதல், 90 நாட்களில் ஹெக்டேருக்கு, 12 முதல்16 டன் வெங்காயம் மகசூல் கிடைக்கும்.

விவசாயிகள் கூறுகையில், ""தடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் பெரும்பாலும் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் செலவு அதிகரிப்பு போன்ற காரணத்தால் தோட்டக்கலை பயிருக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
சிறிய வெங்காயம் அறுவடை நேரத்தில் கிலோ எட்டு முதல் 15 ரூபாய் வரையும், சீஸன் இல்லாத நேரத்தில், 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஓரளவு லாபம் கிடைப்பதால் வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்,'' என்றனர்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media