வெங்காயம் உற்பத்தி பாதிக்குமா

Wednesday, 24 October 20120 comments

இந்த ஆண்டு அண்மையில் கர்நாடகம், ஆந்திரம், மகாராஸ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெய்த கன மழையாலும், பல மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுவதாலும், மக்கள் சமையலு்ககு பெரிதும் பயன்படுத்தி வரும் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்படுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் தில்லி, மும்பையில் ரூ.1000 முதல் ரூ1100 வரை இருந்த ஒரு குவிண்டால் வெங்காயம் இப்போது ரூ.1700 முதல் ரூ.1800 ஆக உயர்ந்துள்ளது. சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.23 முதல் ரூ.26 வரை விற்கப்படுகின்றன. இந் நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டால், வெங்காயம் விலை மேலும் உயரும் என்ற அச்சம் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

உலக அளவில் சுமார் 175 நாடுகளில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல்படி, உலக அளவில் சுமார் 6.7 மில்லியன் ஏக்கர்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் சுமார் 105 பில்லியன் பவுன்ட்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலக அளவில் சீனா, இந்தியா, அமெரிக்கா, துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்து வரை வெங்காயம் தேவைப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் 1978-79-ம் ஆண்டுகளில் சுமார் 0.21 மெட்ரி ஹெக்டேர்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. அது படிபடிப்படியாக உயர்ந்து இப்போது 0.40 மெட்ரிக் ஹெக்டேருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. 

ஆந்திரம், பிகார், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சராசரியாக 0.02 மெட்ரிக் ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 0.03 மெட்ரிக் ஹெக்டேர் பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக கர்நாடகம், மகாராஸ்டிரம் ஆகிய மாநிலங்களில் 0.06 மெட்ரிக் ஹெக்டேர் பரப்பிலும், ஒரிசாவில் 0.05 ஹெக்டேர் பரப்பிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

வெங்காயம் மகசூலைப் பொருத்தவரை, குஜராத் மாநிலத்தில்தான் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 29,617 கிலோ மகசூல் கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரத்தில் 15,413 கிலோ, மத்தியப் பிரதேசத்தில் 12,965 கிலோ மகசூல் கிடைக்கிறது.. மற்ற மாநிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6,000 கிலோ முதல் 10,000 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.

இந் நிலையில், இந்த ஆண்டு பருவமழை சரிவரப் பெய்யவில்லை. பெரும்பாலான பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. அண்மையில் மகாராஸ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பெய்த மழையால் விவசாயிகளுக்கு பெருத்த நஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அகில இந்திய அளவில் வெங்காயம் விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது. இந் நிலையில் இயற்கைச் சீற்றத்தால் சாகுபடி பரப்பு குறைந்து, உற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் வெங்காயம் விலை மேலும் உயரும் என்ற மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு காரீப் பருவத்தின் தொடக்கத்தில் பருவமழை போதிய அளவிற்கு பெய்யவில்லை. அண்மையில் 3 மாநிலங்களில் பெய்த மழையால் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இது எந்த வகையிலும் வெங்காயம் உற்பத்தியை பாதிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மொத்த உற்பத்தி 80 லட்சம் டன்னுக்கு குறையாமல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த நிதியாண்டில் வேளாண் விளைபொருள்கள் உற்பத்தி எந்த அளவுக்கு இரு்க்கும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இருப்பினும், வறட்சிக்கு இலக்கான பகுதிகளில் வெங்காயம் சாகுபடியை விவசாயிகள் துரிதமாக மேற்கொண்டுள்ளனர். மேலும், கூடுதல் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதனால் வெங்காயம் உற்பத்தியில் சரிவு ஏற்படாது என்று வேளாண் துறை கருதுகிறது. சென்ற ஆண்டில் வெங்காயம் உற்பத்தி 70 முதல் 80 லட்சம் டன்னாக இருந்தது. இந்த ஆண்டும் இதே அளவு உற்பத்தி இருக்கும் என நம்புவதாகவும் வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.

ஆந்திரம், கர்நாடகம், மகாராஸ்டிரம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் பெய்த மழையால் வெங்காயம் உற்பத்தி குறையலாம். இருப்பினும் பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவுதான் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் வெங்காய உற்பத்தி பங்களிப்பு குறைவுதான். ஆனால், மகாராஸ்டிரம் உற்பத்தி பெருமளவு இருக்கும். மழையால் மகாராஸ்டிரம் பாதிக்கப்பட்டாலும், வெங்காயம் சாகுபடி செய்யப்படும் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. இதனால், மகாராஸ்டிரத்தை பொருத்தவரை வெங்காய உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்தம் 76 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் மகாராஸ்டிரத்தில் மட்டும் 27 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

ஏற்கெனவே, பத்து வருடத்திற்கு முன் டில்லியில் வெங்காயம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்தது. நாட்டில் மொத்தமாக வெங்காயம் விலை உயர்ந்தாலும் டில்லியில் மட்டும் பல மடங்கு அதிகரித்தது. இதனால், 1998 டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை இழந்தது, காங்கிரஸ் ஆட்சியை கைபற்றியது.

இந் நிலையில் மீண்டும் தற்போது வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. ஆகையால், அதேபோன்றதொரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உசாராக இருக்கும் என்று நம்புவோமாக!
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media