2 ஆயிரம் ஏக்கரில் மட்டும் சாகுபடி சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை விவசாயிகள் மகிழ்ச்சி

Thursday, 25 October 20120 comments

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு நல்லவிலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முதலிடம் வகிக்கிறது. ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்திலுள்ள 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

அறுவடைக்கு பின்னர் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளால் கொள்முதல் பெறப்பட்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. பருவ நிலை மாற்றம், மழை பொய்ப்பு ஆகிய காரணங் களால் வெங்காய சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்த இந்தாண்டு 2 ஆயிரம் ஏக்கரில் மட்டும் சாகுபடி நடந்தது. தற்போது பல இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.

தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் விவசாயிகளிடமிருந்து ரூ. 20 முதல் ரூ. 25 வரை கொள்முதல் விலையாக பெறப்பட்டு விற்பனை நிலையங்களில் ரூ. 35 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த அளவு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டதால் வெங்காயத்திற்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.
இதுபற்றி திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறியதாவது,
சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பயிரிட ரூ. 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவாகும். Êசாகுபடி செய்த நாள் முதல் அறுவடை செய்யும் வரை முறையான பராமரிப்பு மேற்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 70 மூட்டை முதல் 90 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். 80 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு தற்போது ரூ 1,800 முதல் ரூ. 2,500 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. தற்போது கிடைக்கும் விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையாக இருந்தாலும் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கு போதுமான அளவு சின்ன வெங்காயம் இருப்பு இல்லை என்றார்.
எசனை விவசாயி குழந்தைவேலு கூறியதாவது,
 பயிரிடப்பட்டு 3 மாதங்கள் அல்லது 100 நாட்களுக்கு பின்னர் அறுவடை செய்து சருகு பிரித்தெடுத்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு சில விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் வரை தங்கள் வயல் பகுதியில் பட்டறை போட்டு 4 முதல் 5 மாதம் வரை வெங்காயத்தை பாதுகாத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பட்டறைகளில் சேமித்து வைத்திருக்கும் வெங்காயம் முளைத்து விடும். இதனால் பெரும்பாலும் அறுவடை செய்த உடனே வெங்காயத்தை தூய்மை செய்து விற்பனை செய்து விடுவார்கள்.

வெங்காயம் கொள் முதல் செய்யும் இடைத்தரகர் ராமர் கூறுகையில்,பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெங்காய சாகுபடியில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட மிச்சமில்லாமல் நஷ்டமடைந்ததால் இந்தாண்டு  சாகுபடி பரப்பளவு குறைந்து உற் பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் காய்கறி விற்பனை நிலையங்களில் வெங்காயம் விற்பனை அதிகளவில் நடைபெறும்.

 இதனால்  விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கொடுத்து இடைத்தரகர்களான நாங்கள் அதிகளவில் வெங்காயத்தை வாங்கி வருகி றோம். 80 கிலோ கொண்ட ஒருமுட் டை வெங்காயம் சருகுடன் ரூ. 1,500 ரூபாய் முதல் 1,800 வரை கொள்முதல் பெறுகிறோம்.
ரெட்ட மலை சந்து கிராமத்தை சேர்ந்த விவசாயி நாராயண சாமி கூறியதாவது, தற்போது வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் உற்பத்தியை பெருக்க அரசு வேளாண் இடுபொருட்களை மானிய விலை யில் வழங்க வேண்டும். 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர் பாசன வசதி செய்து தர வேண்டும். தரமான வேளாண் இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும். வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

 வேப்பந்தட்டையை சேர்ந்த கல்யாணி கூறியதாவது,
அறுவ டை செய்து நல்ல விலைக்காக விவசாயிகள் பட்டறைகளில் சேமிக்கப்படும் வெங்காயத்தை அதிக நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் வெங்காய குளிர்பதன கிடங்கை உடனே திறக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் கூறியதாவது,
தமிழக அளவில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டம் இந்தாண்டு வெறும்  2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வெங்காயத்தை ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்து சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுத்தி இடைத்தரகர்கள் அதிக லாபம் பெற்று வருகின்றனர். இதனை தடுக்க நெல், கரும்பு போன்ற வேளாண் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது போல் வெங்காயத்திற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media