உற்பத்தி குறைவால் வெங்காயம் விலை உயர வாய்ப்பு

Sunday, 14 October 20120 comments

சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கரீப் பருவத்தில், உள்நாட்டில், வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளதால், இதன் விலை உயரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா உள்நாட்டில், அதிக அளவில் வெங்காயம் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, குறைந்துள்ளது.

இதனால், வெங்காயம் விலை உயரும் என, நாசிக் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். தற்போது, நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 900 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, அடுத்த மாதத்தில், 1,500 ரூபாயாக உயரக் கூடும் என, அவர் மேலும் கூறினார். விற்பனை பொதுவாக, கரீப் பருவத்தில், சாகுபடி செய்யப்படும் வெங்காயம், நவம்பர் மாதம் முதற்கொண்டு, சந்தைக்கு விற்பனைக்கு வரும்.
 சென்ற கரீப் பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில், பருவ மழை குறைந்ததால், இதன் உற்பத்தி குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, வெங்காயம் உற்பத்தி மிகவும் சிறப்பாக இருந்ததால், சில மாதங்களாக இதன் விலை உயராமல் இருந்தது. குறிப்பாக, நாட்டின் முக்கிய பெரு நகரங்களில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 12 முதல் 18 ரூபாய் வரை விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி அதிகரித்தது. அதனால், மத்திய அரசு, சென்ற மாதம், வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது.மேலும், வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கப்பட்டது. இதையடுத்து, சென்ற ஜூன் மாதம் முதல், இதுவரையிலுமாக, நம் நாட்டிலிருந்து, ஒரு லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டில், வெங்காயம் உற்பத்தி குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை மிகவும் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவ்வாண்டில், வெங்காயம் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்தது. உள்நாட்டு தேவையை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இரண்டாவது இடம் உலகளவில், வெங்காயம் உற்பத்தியில், இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், 15 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 1,714 கோடி ரூபாய். இதேபோன்று, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 2,159 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வெங்காயம் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.

நம் நாட்டிலிருந்து, இலங்கை, வங்கதேசம், ரஷ்யா, மொரீஷியஸ், சீனா, சிங்கப்பூர், வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. உற்பத்தி கடந்த 2011-12ம் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின், வெங்காயம் உற்பத்தி, 1.51 கோடி டன்னாக இருந்தது. நாட்டின், மொத்த வெங்காயம் உற்பத்தியில், மகாராஷ்டிரா, 40 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media