சின்ன வெங்காயம் விதைக்க ஏற்ற தருணம்

Sunday, 29 July 20120 comments


     சின்ன வெங்காயம் பயிரிடுவோருக்கு நல்ல விலை கிடைக்க அதைப் பயிரிட இதுவே உகந்த காலம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

   நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் வெங்காயம் 10.5 சதவீதம் பங்களிக்கிறது. மக்களின் அன்றாட உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த வெங்காயத்தில், சின்ன வெங்காயம் மிகுந்த சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 3.05 லட்சம் டன் வெங்காயம் 0.35 லட்சம் ஹெக்டேரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  இதில் சின்ன வெங்காய உற்பத்தி 75 சதவீதம்.

மே மாதம் கிலோ ரூ.12 வரை விற்ற சின்ன வெங்காயம் ஜூன் மாதம் கிலோ ரூ.16 வரை விற்றது. வரும் பருவத்தில் வெங்காய விதைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில் விவசாயிகள் உள்ளனர்.

நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் கர்நாடகம் 2-ம் இடம் வகிக்கிறது. ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கர்நாடக வரத்துகள் இருக்கும். கர்நாடகம் முக்கியப் போட்டியாளராக இருப்பதால் தமிழ்நாட்டின் வெங்காய விலையை கர்நாடக வரத்து பாதிக்கும்.

தற்போது விதைக்கும் வெங்காய பயிர் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு வரும். அந்த நேரத்தில் கர்நாடக வரத்து குறையும். மேலும் அதே சமயம் பருவ மழையும் விலையை நிர்ணயிக்கும்.

இந்நிலையில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவது குறித்து வேளாண் வணிக துணை இயக்குநர் (பொறுப்பு) என்.தனவேல் கூறியது:

அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை இருந்த போதும் விழாக்கால தேவை, கர்நாடக வரத்துகள் முடிவடைதல், ஏற்றுமதி தேவை ஆகிய காரணங்களால் விலை ஏறுமுகத்தில் இருக்கும்.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மைய ஆய்வு முடிவுகளும், நல்ல தரமான வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர், நவம்பரில் கிலோ ரூ.13 முதல் ரூ.16 வரை இருக்கும். சுமாரான ரகம் ரூ.10 முதல் ரூ.13 வரை இருக்கும் என்று கணித்துள்ளது.

ஆகவே விவசாயிகள் சின்ன வெங்காயம் விதைக்க இம் மாதம் மிக உகந்தது. விவசாயிகள் விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை விதைத்தால் பயிர்செலவு குறையும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media